‘ஷூ கிழிஞ்சிருந்தது உண்மதான்’.. ‘ என் அப்பா எனக்காக மாட்டுக்கு வெச்சிருந்த சாப்பாட்ட’.. கதறி அழுத கோமதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, தனது ஷீ கிழிந்திருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் அண்மையில் நடைபெற்றது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி. இப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடி, தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதல் பரிசைத் தட்டிச் சென்றதால், தங்கப் பதக்கம் பெற்று தங்க மங்கையானார்.
திருச்சி அருகே முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து ஓடி ஜெயித்தபோது, அவரது தாயாரிடம் பலரும் சென்று டிவி-யை ஆன் செய்து பார்க்கச் சொல்லியுள்ளனர். ஆனால் அவரோ, டிவி-யை ஆன் பண்ணத் தெரியாது என்று கூறி மகள் ஓடி தங்கப்பதக்கம் வென்றதற்காக மகிழ்வதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியிருந்த கோமதி மாரிமுத்து, தன்னால் பொருளாதாரம் மற்றும் பேருந்து, சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளில் பின் தங்கி இருக்கும் தனது ஊரின் பெயர் இன்னும் வெளியில் தெரிந்துள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தனக்காக தன் பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனது அப்பா மாட்டுக்கான உணவை உண்டு, தன்னை ஸ்போர்ட்ஸ்க்கு அனுப்பிவைத்ததாகவும், தற்போது உயிரோடிருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றும் கூறியிருந்தார். அந்த ஏழ்மையில்தான் தான் வளர்ந்து இப்போது இத்தகைய சாதனையை புரிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தவிர கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூ அணிந்து ஓடியதாக பேச்சுகள் எழுந்திருந்தன. இதுகுறித்து அண்மையில் பத்திரிகையாளர்களை சந்திப்பில் விளக்கம் அளித்த கோமதி மாரிமுத்து, ஆம் தனது ஷூ கிழிந்திருந்தது உண்மைதான் என்றும், அந்த ஷூவை அணிந்துகொண்டுதான் தான் ஓடியதாகவும் புன்னகையுடன் கூறியுள்ளார். மேலும் அடுத்து ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பதே தனது விருப்பமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.