திருச்சி: திருட வந்ததாக நினைத்து பொறியியல் பட்டதாரியை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்ற வடமாநில தொழிலாளர்கள்..? பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் திருட வந்தவர் என நினைத்து வாலிபரை அடித்து கொலை செய்ததாக அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலார்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

திருச்சி: திருட வந்ததாக நினைத்து பொறியியல் பட்டதாரியை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்ற வடமாநில தொழிலாளர்கள்..? பரபரப்பு சம்பவம்..!

திருச்சி மணிகண்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு மர அறுவை ஆலை மற்றும் விற்பனை கடை இயங்கி வருகிறது. திரேந்தர் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆலைக்குள் வாலிபர் ஒருவர் வந்ததாக சொல்லப்படுகிறது. அவரை அங்கிருந்த தொழிலார்கள் விரட்டியதாக தெரிகிறது.

மீண்டும் அந்த வாலிபர் அதே ஆலைக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் திருட வந்திருக்கலாம் என ஆலையில் பணிசெய்தவர்கள் நினைக்க, அந்த வாலிபரை அருகில் உள்ள மரத்தில் கட்டிவைத்து தாக்கியிருக்கின்றனர். இதனையடுத்து, ஊழியர்கள் வேலைக்கு திரும்ப அடுத்தநாள் காலை மரத்தில் கட்டிவைத்த அந்நபர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அச்சமடைந்திருக்கின்றனர்.

அப்போது, அவரை எழுப்பியதில் அவரிடத்தில் எவ்வித சலனமும் இல்லை. இதையடுத்து ஆலையின் உரிமையாளர் திரேந்தர் மணிகண்டம் காவல்நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் திருச்சி துவாக்குடி தெற்கு வாண்டையார் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சக்கரவர்த்தி (33) என்பது தெரியவந்திருக்கிறது. பொறியாளரான இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

மதுப்பழக்கம் கொண்டவராக சொல்லப்படும் சக்கரவர்த்தி ஆலைக்குள் சென்றபோது அவரை திருடர் என நினைத்து அங்கிருந்த தொழிலார்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோகிது சேக், பைசல் ஷாக், மப்ஜில் ஹூக், ரசீதுல் ரஹ்மான் ஆகியோரை மணிகண்டம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

TRICHY, MANIKANDAM, ASSAM WORKERS

மற்ற செய்திகள்