"ஐயா... உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுடுங்க..." "கோழிக்கு கொரோனான்னு வதந்திய பரப்பியது தப்புதானுங்கோ..." "யாரும் கொந்தளிக்காதிங்க..." மாற்று வீடியோ வெளியிட்டதால் ஜாமீன்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கறிக்கோழிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் குறித்து நாள் தோறும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அதில் ஒரு வதந்தி ஒட்டுமொத்த கறிக்கோழி மற்றும் முட்டை விற்பனையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றள்ளது. ஒரு கிலோ கறிக்கோழி 60 ரூபாய்க்கும், அதற்கு முட்டைகளை இலவசமாகவும் விற்பனை செய்யக் கூடிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது இதையடுத்து சைபர் போலீசார் வாட்ஸ்ஆப்பில் தகவல் பரப்புவோரை கண்காணிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கோழிகளுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளது என்ற தகவல் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் எனவும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் பரவி வந்தது.
இதுகுறித்து விசாரித்த போலீசார், கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது வாட்ஸ்அப் எண்ணில் இருந்து தகவல் பரவியதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். பொய்யான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்ட பெரியசாமி, அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.