‘அண்ணா! யாரோ என்ன கடத்திட்டாங்க’... ‘தங்கையிடமிருந்து வந்த ஃபோன் கால்’ ... ‘பதறிப்போன குடும்பத்துக்கு’... ‘காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலனுடன் சேர்ந்து, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி, தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, இளம்பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வித்யா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மர்மநபர் ஒருவர் தன்னை கடத்திவிட்டதாக, தனது சகோதரருக்கு கூறிவிட்டு செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் வித்யா. சில மணி நேரம் கழித்து, வித்யாவின் தந்தை ஆறுமுகத்தை, இண்டெர்நெட் கால் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், 10 லட்சம் ரூபாய் பணத்தை தான் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுக்கவில்லை என்றால் வித்யாவை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் பதறிப்போன வித்யாவின் தந்தை, தனது உறவினர்களுடன், கிருஷ்ணகிரியில் இருந்து, சென்னை கோயம்பேட்டிற்கு வந்து, இங்குள்ள காவல் நிலையத்தில், தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வித்யா காரைக்காலில் உள்ள கல்லூரியில் படித்தபோது, என்ஜினீயரிங் மாணவரான மனோஜ் என்பவரை காதலித்ததாகவும், அவர்கள் இருவரும், தற்போது வரை காதலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இருவருமே நல்ல வேலையில் இருந்தாலும், வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு, வித்யாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து மலேசியாவில் உள்ள மனோஜை தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டால் பிரித்துவிடுவார்கள் என்றும் நாட்டைவிட்டுச் சென்று கலப்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, மனோஜ் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இங்கே இருவரும் சேர்ந்து, கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால், தனது தந்தையிடம், தன்னை கடத்தி விட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டும்படி காதலனுக்கு, திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் வித்யா. இதையடுத்து கடத்தல் நாடகமாடிய காதலர்களை, கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.