'யப்பா...! இந்த ஏடிஎம் கார்டு வச்சு பணம் எடுத்து கொடுப்பா...' 'கார்டு கொடுத்த சில நொடிகளில் இளைஞர் போட்ட பிளான்...' 'வெளிநாட்டுல கஷ்டப்பட்டு உழைச்ச காசு...' - நூதன மோசடி.
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணக்கொடையான் என்ற ஊரை சேர்ந்த முத்து என்பவரது மனைவி வள்ளி (40).
இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவ்வப்போது தனது மனைவிக்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைப்பார்.
வள்ளி, அவர் வீடு இருக்கும் பகுதியில் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கான பொருட்களை வாங்குவதற்காக அவ்வப்போது பெண்ணாடம் செல்வார்.
அதேபோன்று சம்பவத்தன்று பெண்ணாடம் வந்த வள்ளி, தன்னுடைய கணவர் தனக்காக அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம் சென்டருக்கு போயுள்ளார்.
அப்போது அந்த மையத்தின் உள்ளே நுழைந்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர், பணம் எடுப்பதற்கு வந்தவர் போல் உள்ளே இருந்துள்ளார். அவரிடம் தனது ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய எண்ணை கொடுத்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
உடனே அந்த நபர் வெறும் ரூ.5,000 மட்டுமே எடுத்துக் கொடுத்துவிட்டு, ஏ.டி.எம்-ல் பணம் தீர்ந்து விட்டது. நீங்கள் வேறு ஏ.டி.எம் சென்று மீதி பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வள்ளியிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள வள்ளியின் மகன் விவேக் செல்போன் எண்ணுக்கு ஏ.டி.எம்-ல் இருந்து ரூ.20,000 பணம் எடுத்துள்ளதாக SMS சென்றுள்ளது.
இதுகுறித்து அவர், தனது தாய் வள்ளியிடம் கேட்டுள்ளார். அப்போது வள்ளி ரூ.5,000 மட்டுமே எடுத்ததாகவும் அதுவும் தான் எடுக்கவில்லை என்றும், ஏ.டி.எம்-ல் இருந்த ஒரு வாலிபர் அந்த பணத்தை எடுத்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதன்பிறகே தான் நன்றாக ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்தார்.
மேலும் அவரிடம் அந்த வாலிபர் பணத்தை எடுத்துவிட்டு கொடுத்த ஏ.டி.எம் கார்டும் போலியானது என்று தெரிய வந்துள்ளது. வள்ளியிடம் ரூ.5,000 பணம் எடுத்துக் கொடுத்து விட்டு அவரது கார்டை வைத்து மேலும் 15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து வள்ளி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஏ.டி.எம் சென்டரில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஏ.டி.எம்-ல் ஏமாற்றி பணம் எடுத்த அந்த இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்