'சென்னை வெள்ளம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இறுதிச் சடங்கு'... 'எதுக்கும் அசராத ரியல் சிங்கப்பெண்'... யார் இந்த அமுதா ஐஏஎஸ்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமுதா ஐஏஎஸ், இந்த பெயரைத் தமிழகத்தில் அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பெரு வெள்ளத்தால் சென்னை மாநகரமே தத்தளித்த நேரத்தில் களத்தில் இறங்கி மக்களை மீட்டவர். காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் நேரடியாகக் களத்தில் இறங்கி மீட்ட அமுதாவைத் தமிழகமே அண்ணாந்து பார்த்தது. பெரு வெள்ளம் முடிந்தும் தனது அதிரடியைத் தொடர்ந்த அமுதா, பல அச்சுறுத்தல்கள் வந்தபோதும் சென்னை நகரின் பல ஆக்கிரமிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் அகற்றி பலரது பாராட்டுகளைப் பெற்றார்.
மதுரையைச் சேர்ந்த அமுதா, 1994 ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று கடலூரில் துணை ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கினார். இவர் தருமபுரி ஆட்சியராக இருந்தபோது அங்கு நிலவி வந்த குழந்தை திருமணம், கள்ளச்சாராயத்தை ஒளித்து மக்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்றார். தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலும் திறம்பட பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா. தனது பணிக்காலத்தில் மறக்கமுடியாத நிகழ்வாக அவர் இன்றும் குறிப்பிடுவது ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரும் அரசியல் தலைவர்களின் இறுதிச் சடங்களை நிர்வகித்து எந்த குழப்பமும் இல்லாமல் செய்து முடித்ததுதான்.
திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கு மெரினாவில் நடைபெறுவதில் சிக்கல் எழுந்திருந்தது. சட்டப்போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே மெரினாவில் தான் என முடிவானது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எந்த ஒரு சலசலப்புக்கு இடங்கொடுக்காமல், தனது பணியைத் திறம்படச் செய்து முடித்தார். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் சிறிதும் பதற்றம் இல்லாமல் ஒரு பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதை அமுதா வெற்றிகரமாகச் செய்து காட்டினார். கட்டுக்கடங்காமல் திரண்ட மக்கள் வெள்ளம், பல முக்கிய தலைவர்கள் எனப் பலர் பங்கேற்ற ஏபிஜே அப்துல்கலாமின் இறுதிச் சடங்கையும் சரிவரச் செய்து முடித்தவர் தான் அமுதா ஐ.ஏ.எஸ்.
தற்போது முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியையாக பணியாற்றி வரும் அமுதா, தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் என்ற முக்கியமான பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் செயலாளர் என்ற பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், கெளரவம் மிக்க பதவிகளில் ஒன்றாகும். அந்த பதவிக்கு தற்போது அமுதா நியமிக்கப்பட்டிருப்பது அவரது திறமைக்குக் கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்