‘நீங்க சாப்பிட்டது மான் கறி இல்ல’.. அப்புறம்..? பிரியாணிக்கு பேர்போன ஆம்பூரை அதிரவைத்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு சமயத்தில் மக்களிடம் மான் கறி எனக் கூறி பூனை கறியை விற்று வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளில் சில நாள்களாக நாடோடி இனத்தை சேர்ந்த சிலர் ரகசியமாக மான் கறி விற்பனை செய்து வந்ததாகவும், கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்ததாகவும் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. மான் கறி ஆசையில் பொதுமக்கள் பலர் அந்த இறைச்சியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் விற்பனை படுஜோராக நடந்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி மான் இறைச்சியை வாங்கி சாப்பிடுவது குற்றம் என தெரிந்தும் பொதுமக்கள் பலர் இந்த கறியை வாங்கி ருசித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது போலீசாரிடம் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடமிருந்த பையை சோதனை செய்தபோது, இறைச்சியும், பூனை தலைகள் பலவும் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் இத்தனை நாட்களாக மான் கறி என ஏமாற்றி பூனை கறியை விற்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சோலூர் அருகே உள்ள நமாஸ்மேடு நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பதும், இவரை போல மேலும் பலர் பூனை கறியை மான் கறி என விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூரில் மான்கறி ஆசையில் மக்கள் பூனை கறியை ருசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகளின் இறச்சியை வாங்கி சாப்பிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையின் எச்சரித்துள்ளனர்.