"இத சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.!".. சோசியல் மீடியா தகவலால் விபரீதம்.. இளைஞர் மரணம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆம்பூர் அருகே சமூக வலை தளங்களில் வந்த தகவலை நம்பி செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்டதாக சொல்லப்படும் இளைஞர் திடீரென மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விரல் சொடுக்கும் நேரத்தில் நாம் விரும்பிய தகவலை இணையத்தில் பெற முடியும். ஆனால், இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்கலையும் அப்படியே நம்புவது பெரும் ஆபத்தில்போய் முடியலாம் என மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், சோசியல் மீடியாவில் வந்த தகவலை பார்த்துவிட்டு செங்காந்தள் பூச்செடியின் கிழங்கை சாப்பிட்டதாக சொல்லப்படும் இளைஞர் திடீரென மரணமடைந்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். 25 வயதான இவர் மின்னூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், லோகநாதன் சமூக வலை தளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, செங்காந்தள் மலர் செடியின் கிழங்குகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சமூக வலை தளத்தில் வந்த தகவலை அவர் பார்த்ததாக தெரிகிறது.
இதனையடுத்து தன்னுடன் வேலைபார்த்து வரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியை சேர்ந்த ரெத்தினம் (45) என்பவருடன் நேற்று செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவருக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.
இதனால் அச்சமடைந்த இருவரது குடும்பத்தினரும் லோகநாதன், ரெத்தினத்தை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக லோகநாதன் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனிடையே ரெத்தினத்திற்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் காவல்நிலைய அதிகாரிகள், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலை தளங்களில் வந்த தகவலை பார்த்து செங்காந்தள் பலரின் கிழங்கை சாப்பிட்டதாக சொல்லப்படும் இளைஞர் மரணமடைந்த சம்பவம் வேலூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "டாக்டர். இளையராஜா..".. இசைஞானிக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி.! உடனிருந்த முதல்வர் ஸ்டாலின்..!
மற்ற செய்திகள்