P.E.T பீரியடில் வேறு பாடம் நடத்துவதா?.. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்.. குஷியில் மாணவர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்P.E.T பீரியடில் மாணவர்களுக்கு வேறு பாடங்கள் நடத்த வேண்டாம் என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிகளில் வாரம் 2 அல்லது 3 வகுப்புகள் விளையாட்டுக்காக ஒதுக்கப்படும். இருப்பினும் சில ஆசிரியர்கள் அந்த வகுப்புகளை தங்களது பாடங்களை நடத்த பயன்படுத்திக்கொள்வதாக தொடர்ந்து மாணவர்கள் சொல்லி வருகின்றனர். இதனிடையே, நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரு உள் விளையாட்டரங்கில் மாணவ மாணவிகளை சந்தித்தார்.
அப்போது, ஒரு பள்ளி மாணவி,"PET பீரியட்ல விளையாட மட்டும் அனுமதிச்சா நல்லா இருக்கும். அந்த பீரியட்லயும் மத்த பாடங்களை நடத்துறாங்க" என புன்னகையுடன் சொல்ல, சக மாணவர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"சரிம்மா கண்டிப்பா நிறைவேற்றுவோம். இதுபற்றி துறை சார்ந்த அதிகாரிகள் கிட்ட பேசுறேன்" என்றார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,"பள்ளிக் கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும்" என்றார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வுகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்போது துறைசார்ந்த கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும் பின்னர் அவை முதல்வரிடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார். அதனை முதல்வர் ஆய்வு செய்தபிறகு ஆணையை வெளியிடுவார் எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்