'போதைக்காக' கேஸ் ஊழியர் செய்த 'காரியம்...' 'வினையாக' முடிந்த 'விபரீத செயல்'... 'கோவையில்' நிகழ்ந்த 'சோக சம்பவம்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து வந்த கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபான பிரியர்கள் கடும் மனஉளைச்சலை சந்தித்துள்ளனர். அவர்கள் போதைக்காக பல மாற்று வழிகளை கையாள்கின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூரில் போதைக்காக நபர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த பெர்னான்டஸ் என்பவர், சூலூரில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்போது கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்வதற்காக தனியார் ஏஜென்ஸி நிறுவனம் சார்பில் சானிடைசர் வழங்கப்பட்டிருந்தது.
மதுவுக்கு அடிமையான இவர், சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதை அறிந்து கொண்டு, கடந்த இரண்டு தினங்களாக சிறிது சிறிதாக அதில் தண்ணீர் கலந்து போதைக்காக குடித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்த பெர்னான்டசை அருசில் வசித்து வந்தவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து, சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.