அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. 144 தடை விதித்த அதிகாரிகள்.. பரபரப்பான சென்னை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
Also Read | "அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியில் இருந்து OPS நீக்கம்!".. பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானம்..!
பொதுக்குழு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
நீக்கம்
அதிமுக-விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்றம் வரையில் சென்றது.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் அதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பார் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீல் வைப்பு
இந்நிலையில், இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஆலோசனை நடத்தினார். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு 144 தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாக கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்