“கடும் நடவடிக்கை எடுங்கள்”!.. முதல்வர் ஸ்டாலினுக்கு ‘ஓபிஎஸ்’ வைத்த கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர விசாரித்து, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதியப் பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (24.11.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமை கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு, அதை நிவர்த்தி செய்யும் வகையில் பேருந்து சேவைகளின் இயக்கத் திறனை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து நிறுவனங்கள் சிக்கனமாகச் செயல்படுவதற்கும், இலவச அல்லது மானியம் அளிக்கப்பட்ட பேருந்துப் பயணம் வேண்டுமென அரசு விரும்புகிற இனங்களில் நெறிசார் செலவு அளவுருக்களின் அடிப்படையில் வெளிப்படையான மானியம் வழங்கும் புதிய முறையை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிலைமையைப் பார்க்கும் போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும், முன்பை விட நிலைமை மோசமாக இருப்பதாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், பிரச்சினைகள் முன்பைவிட அதிகமாக இருப்பதாகவும், கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், பேருந்துகளுக்கான ஆயுட்காலம் ஆறு ஆண்டுகளில் இருந்து ஒன்பது ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. என்றும், அதே சமயத்தில் பேருந்துகளைப் பராமரிப்பதற்குத் தேவையான உதிரி பாகங்களுக்கு நிதி இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும், இதன் காரணமாக பேருந்துகள் நடுவழியில் நிற்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்வதாகவும், இலவசப் பயணங்களால் நடத்துனர்களுக்கான படிப்பணம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், வழித்தட மாற்றுப் பணி, இலகுப் பணி வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும், இதுபோன்ற செயல் காரணமாக நேர்மையான ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்துத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் திமுகவிற்கு வாக்களித்தனர். அவர்களுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள திமுக, அதனை நிறைவேற்றாதது மன வருத்தத்தை அளிப்பதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை கூட வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை ஆற்றொணாத் துயரத்தில் திமுக ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ஏளனமாகப் பேசுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சினைகளில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்து ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்திற்கு வழி கொடுக்க இயலாத நிலையில், ஆத்திரமடைந்த தனியார் வாகன ஓட்டுநர் அரசுப் பேருந்தை முந்திச் சென்று மறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி கைகளில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், கடன் சுமையை குறைப்பதிலும், சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்களை வழங்குவதிலும், அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக அரசு செயல்படுகின்றது. சட்டம்-ஒழுங்கும் சீரழிந்து கொண்டிருக்கின்றது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.
எனவே, முதலமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர விசாரித்து, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதியப் பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கவும், முறைகேடுகளைக் களையவும், கடன் சுமையை குறைக்கவும், உதிரி பாகங்கள் வாங்க நிதி ஒதுக்கவும், இலவசப் பயணம் காரணமாக நடத்துனர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுகட்டவும், சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்