'13 வயதில் தேனியிலிருந்து காசி'... 'திடீரென வந்து நின்ற அகோரி'... 'ஊருக்கு வந்ததும் நடந்த சம்பவம்'... பதற்றமான ஊர்மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகன் சொக்கநாதர். இவர் தனது 13 வயதில் திடீரென ஊரைவிட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தேனியிலிருந்து சென்ற சொக்கநாதர், காசிக்குச் சென்று சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாகச் சொல்லப்படுகிறது.

'13 வயதில் தேனியிலிருந்து காசி'... 'திடீரென வந்து நின்ற அகோரி'... 'ஊருக்கு வந்ததும் நடந்த சம்பவம்'... பதற்றமான ஊர்மக்கள்!

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தனது சொந்த ஊரான மொட்டனூத்து கிராமத்துக்குச் சொக்கநாதர் மீண்டும் வந்துள்ளார். திடீரென அகோரி ரூபத்தில் வந்த அவரை பலருக்கும் அடையாளம் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று காலை அங்குள்ள தோட்டம் ஒன்றில், குழியை வெட்டி அதனுள்ளே சிவன் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கிவைத்து, தவம் செய்யப் போவதாகவும், மேல் பகுதியில் சிமெண்ட் சிலாப்புகளை வைத்து மூடி விடும்படியும் சொக்கநாதர் கூறியிருக்கிறார். இதையடுத்து, அவரின் பக்தர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் ஊர்மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவல் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாமியாரிடம் இதுபோன்று பூஜை எல்லாம் நடத்தக்கூடாது என கூறினார்கள். அதற்கு அவர், ''பல வருடங்களுக்கு முன்பே நான் காசிக்குச் சென்று விட்டேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு சாப்பிட்டதில்லை, தண்ணீர் குடிப்பதில்லை. சிவனடியார்களிடம் தீட்சை பெற்றதால் அகோரி முனிவராக மாறி விட்டேன். எனது பெயர் இப்போது சொக்கநாத அகோர முனிவர் ஆகும்.

தற்போது, புகை பிடித்தே நான் உயிர் வாழ்கிறேன். 9 நாள்கள் உள்ளேயிருந்தாலும், நான் சாக மாட்டேன். நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள் தாக்கி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த பூமி பூஜையில் இறங்கியுள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள்.9 நாள்களுக்குப் பிறகு தீபாவளிக்கு முதல் நாள் நான் வெளியே வருவேன்'' என்று கூறினார்.

இதற்கிடையே அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில், இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட பலரும் அந்த இடத்திற்கு வரத் தொடங்கினார்கள். இதையடுத்து, போலீசார் சாமியாரிடம் குழிக்குள் இறங்கி பூமி பூஜை செய்யக்கூடாது. அதற்கு அரசு அனுமதி இல்லை. எனவே, குழியை விட்டு வெளியேறி வருமாறு கூறினர். சுமார் 2 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு குழியிலிருந்து சாமியார் வெளியே வந்தார். மீண்டும் சாமியார் குழிக்குள் இறங்கி விடக் கூடாது என்பதற்காக, போலீஸார் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்