'பல லட்சம் செலவில் கண்டெய்னரில் பணிமனை'... 'தினமும் வீடு வீடாக பிரச்சாரம்'... மொத்த கனவையும் தகர்த்த தொகுதி பட்டியல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாவதற்கு முன்பே பிரச்சாரத்தில் இறங்கிய குஷ்புவிற்கு பெரும் ஏமாற்றும் மிஞ்சியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு, அதிமுக 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்தது. இதனால் பல மாதங்களுக்கு முன்னரே குஷ்பு அங்குப் பொறுப்பாளராக இறக்கி விடப்பட்டார். அவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் தேதி, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. திமுகவைப் பொறுத்தவரை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியானது. இதனால் உதயநிதிக்கு எதிராக பாஜக தரப்பில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்ற கோணத்தில் பல தகவல்கள் பரவின.
மேலும் இதுகுறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அதை ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. கட்சி வாய்ப்பளித்தால் செயல்பட வேண்டியதுதான் என்று பதில் அளித்தார். இதனால் உதயநிதி மற்றும் குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றே பார்க்கப்பட்டது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, குஷ்பு சேப்பாக்கம் பகுதியில் பேரணி சென்றார். பல இடங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்குப் பதிலளித்தார். எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேட்டி அளித்தார்.
அதோடு சில நாட்கள் முன்னர் தொகுதியில் குஷ்பு பணிமனை ஒன்றைச் சொந்த செலவில் உருவாக்கினார். கண்டெய்னர்கள் கொண்டு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பணிமனை பின்னர் வேட்பாளரின் பணிமனையாக மாறும் என்று பேசப்பட்டது. குஷ்பு அந்தப் பணிமனையில் தினமும் வந்து அமர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தெருத்தெருவாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார், வயதான பெண்களின் காலில் விழுந்தார், கட்டிப்பிடித்தார், சிறுபான்மை மக்களைச் சந்தித்தார்.
ஒரு வேட்பாளர் என்னென்ன செய்வார்களோ அனைத்தையும் அவர் செய்தார். குஷ்புதான் பாஜகவின் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் என அனைவரும் நம்பினர். ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் நேற்று வெளியான தொகுதி பட்டியலில் சேப்பாக்கம் தொகுதியானது பாமகவுக்கு என்று அறிவித்து அதிமுக தரப்பில் தொகுதிப் பட்டியல் வெளியானது.
இதேபோன்று நடிகை கவுதமியும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. கவுதமியும் தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்டு வந்தார். ஆனால், பாஜக பட்டியலில் ராஜபாளையம் தொகுதி இல்லை. இதனால் பாஜக தரப்பில் நட்சத்திர வேட்பாளர்களாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவுதமி மற்றும் குஷ்பு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது அவர்களை மட்டுமல்லாது பாஜக தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்