"தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு!".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தமிழகத்தில் தொழில்வளம் பெருகச் செய்தது அதிமுக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஓசூரில் பிரச்சாரம் செய்த அவர், அந்த தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் வந்துள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டார்.
மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, கொரோனா காலத்திலும் தொழில்முதலீடுகளை ஈர்த்தது என அதிமுக அரசு தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கியிருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலுக்காக திமுகவினர் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து வருவதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை, இலவச வாஷிங்மெஷின் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டினார்.
அதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் 45 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
யாரும் கோரிக்கை வைக்காமலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தியதாகவும் அவர் கூறினார். கொரோனா காலத்திலும் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்த ஒரே மாநிலம் தமிழகம் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்