'இருக்கும் போது மட்டும் இல்ல, இறந்த பிறகும் அப்படி தான்'... 'மருத்துவர் சாந்தாவின் கடைசி ஆசை'... நெகிழ வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி சாந்தா, வார இறுதியில் லேசான மார்பு அசௌகரியம் ஏற்பட்டபோது மருத்துவமனை நிர்வாகிகளிடம் உருக்கமான ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
94 வயதான மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சாந்தா, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அப்போலோ மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்புகளை அகற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் காலமானார்.
மூன்று பத்ம விருதுகள் மற்றும் ரமோன் மாக்சேசே விருது உட்பட பல்வேறு மரியாதைக்குரிய கவுரவங்களைப் பெற்ற மூத்த மருத்துவரின் மரணத்திற்கு நாடே இரங்கல் தெரிவிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
செவ்வாய்க்கிழமை, மாலை 4.30 மணியளவில், அவரது உடல் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் அவரது நோயாளிகளுடன் ஊர்வலமாக பெசன்ட் நகர் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து 72 குண்டுகள் முழங்க சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திங்கள்கிழமை இரவு 8.30 மணி வரை, அவர் தொடர்ந்து தனது பணிகளைச் செய்துகொண்டுதானிருந்தார். நோயாளிகளின் உடல்நலம் தொடர்பான ரிப்போர்ட்டை பார்த்துக்கொண்டிருந்தார். ஆராய்ச்சித் திட்டங்களைப் பற்றி விசாரித்தார்.
நிறுவனத்திற்கான நிதி தொடர்பான கடிதத்தை சரிபார்த்து தனது உதவியாளரிடம் வழங்கினார்.
அப்போது திடீரென அவருக்கு வலி அதிகரிக்கவே, மருத்துவர்கள் குழு அவரை சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
"அவரது ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. எங்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை" என்று மூத்த இருதயநோய் நிபுணர் ஒருவர் கூறினார்.
அப்போது தனது இறுதி நிமிடங்களில், "நான் இறந்தால், என் அஸ்தியை நிறுவனம் முழுவதும் தூவுங்கள். நான் இந்த மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்பவில்லை" என்று டாக்டர் சாந்தா மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
அதனால், "அவரின் விருப்பப்படியே அவரது அஸ்தி நிறுவனம் முழுவதும் தெளிக்கப்படுவதை உறுதி செய்தோம்" என்று அவரது சகோதரியும் மருத்துவமனையின் குழு உறுப்பினருமான வி சுஷீலா கூறினார்.
மற்ற செய்திகள்