‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் புதிய உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கட்சி தொடங்கும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ஊரடங்கு வந்துவிட்டது. இதனால் ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்.
ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு முன்பு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கமாக உள்ளது.
அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர்.
ஆனால், பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்க ரஜினி விரும்பாமல், அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாஸ்க் அணிந்தபடி, கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. பின்னர் அனைவரையும் நோக்கி கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
நல்ல நாளில் ரஜினியை சந்தித்த உற்சாகத்துடன் ரசிகர்கள் புறப்பட்டுச் சென்றனர். ரஜினி ரசிகர்களை நோக்கி கையசைத்தபோது எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தலைவா ஹேப்பி தீபாவளி, தலைவரின் லேட்டஸ்ட் தீபாவளி தரிசனம் என்றும் ரசிகர்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘 (@mayavarathaan) November 14, 2020
மற்ற செய்திகள்