10 பேருக்கு 'வீடு' கட்டி கொடுத்த நடிகர் 'ரஜினி காந்த்'... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகையை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு, தான் உறுதியளித்தபடி, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கியுள்ளார்.
வருடந்தோறும் வடகிழக்கு பருவ மழையின்போது, தமிழகத்தில் சில மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளில், கஜா புயல் கோர தாண்டவமாடியது. அதில் பலர் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து தவித்து வந்தனர். அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்று வரை, அங்குள்ள மக்கள் மீளவில்லை.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள தலை ஞாயிறு, கோடியக்கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், மிகவும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டி தரப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைப்பெற்று வந்தது. தற்போது முற்றிலுமாக வீடு கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்தில், ரஜினிகாந்த் அவர்கள், அவருடைய கைகளால் கட்டி முடிக்கப்பட்ட 10 வீடுகளின் சாவியை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குத்துவிளக்கும் கொடுத்துள்ளார். ஒரு வீட்டிற்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என்ற மதிப்பில், மொத்தம் 10 வீடுகளுக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளன என்று ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயனாளி மீனாட்சி, எந்த அரசாங்கமும் செய்யாததை நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.