"துப்பாக்கி எடுத்துக்கொண்டு நக்சலைட் ஆகும் அளவுக்கு கோபம் வந்தது" - போர் கண்ட சிங்கம் கமல் உரை
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் கமல் ஹாசன் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் கமல் ஹாசன். தனது ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவே அமைந்து இருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைய இருப்பதை நேற்று உறுதிப்படுத்தியிருந்தார் கமல் ஹாசன். KH234 என்று அழைக்கப்படும் இந்த படத்தை மணிரத்னம் இயக்க மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில், இன்று தனது 68வது பிறந்தநாளை அவர் கொண்டாடுவதை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர்,"எதை செய்தாலும் தீவிரமாக செய்யவேண்டும். விரும்பி நாம் செய்யும் விஷயங்களில் படு தீவிரமாக செயல்பட வேண்டும். நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வழி ஆரோக்கியமானதாக நான் உணர்கிறேன். துப்பாக்கி எடுத்துக்கொண்டு நக்சலைட்டாக போகலாமா எனும் அளவுக்கு எனக்கு கோபம் வந்தது உண்டு. நல்லவேளை அந்தமாதிரியான வழியில் போகாமல் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன்.
என் அப்பா சொல்லிக்கொடுத்து காந்தி எனும் வார்த்தை என்னுடைய நாவில் வரவில்லை. எல்லோரையும்போல ஒருமையில் பேசக்கூடிய அறிவிலியாகத்தான் நானும் இருந்தேன். அவரா வாங்கிக்கொடுத்தாரு சுதந்திரம்? மீதிப்பேர் எல்லாம் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க என சவுகரியமாக கேட்க முடியும். ஆனால், நான் வாங்கிக்கொடுத்தேன் என அவர் எங்கேயுமே சொல்லவில்லை.
ஒவ்வொருவருமே சத்தியாகிரகியாக வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அப்படி நிகழ்ந்தது தான் இந்த சுதந்திர போராட்டம். ஆனால், அந்த காந்தியார் எதெதெல்லாம் நடக்க கூடாது என்று பயந்துகொண்டு இருந்தாரோ அவையெல்லாம் 75 ஆண்டுகளில் அரங்கேற்றி இருக்கிறோம் நாம். அதற்கு மாற்றாக சட்டையை திறந்துகொண்டு கவசமில்லாமல் களமிறங்கி இருக்கிறேன் நான். நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டும்" என்றார்.
மற்ற செய்திகள்