வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... 'ராம்' பட பாணியில் வாசலில் அமர்ந்திருந்த 'மகன்'... 'வெலவெலத்துப்' போன 'போலீசார்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், தாயைக் கொன்றுவிட்டு போலீசை வீட்டிற்குள் விட மறுத்த மனநலம் பாதித்த மகனை போலீசார் கைது செய்தனர்.

வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... 'ராம்' பட பாணியில் வாசலில் அமர்ந்திருந்த 'மகன்'... 'வெலவெலத்துப்' போன 'போலீசார்'...

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, ஆபுத்திரன் தெருவில், அகிலன் என்பவர் தனது தாயு விமலாவுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு சற்று மன நிலை சரயில்லை எனக் கூறப்படுகிறது. அகிலனின் தந்தை, பாளையங்கோட்டை ஆபுத்திரன் தெருவில் நான்கு வீடுகளைக் கட்டியிருப்பதால் அதில் வரும் வாடகையைக் கொண்டு அகிலன் மற்றும் அவரது தாயார் இருவரும் குடும்ப செலவுகளை சமாளித்து வந்தனர்.

இருவரும் அருகில் வசிப்பவர்களிடம் அதிகம் பேசுவதில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், இவர்களின் வீட்டு மாடியில் குடியிருந்த மார்ட்டின் என்பவர், சில வாரங்களுக்கு முன்பு வீட்டைக் காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் வீட்டுக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையை விமலாவிடமிருந்து வாங்குவதற்காக மார்ட்டினின் தந்தை இன்று வந்துள்ளார்.

அட்வான்ஸ் பணத்தை வாங்க வீட்டுக்குள் செல்ல முயன்ற மார்ட்டினின் தந்தையை வாசலில் அமர்ந்திருந்த அகிலன் அனுமதிக்கவில்லை. அவரிடம் கேட்டபோது, ‘எங்கம்மா செத்துட்டாங்க’ எனச் சொல்லியிருக்கிறார். வீட்டில் இருந்து துர்நாற்றம் எழுந்ததால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

பாளையங்கோட்டை போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவர்களையும் வீட்டுக்குள் விட மறுத்து வாசலிலேயே அமர்ந்திருந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், போலீஸார் அவரைச் சமாளித்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அங்கு விமலா தலையில காயத்துடன் இறந்து கிடந்தார். பிறகு உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விமலா தலையில் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொலை நடந்து இரு தினங்கள் ஆகியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

70 வயது மூதாட்டியான விமலாவை மனநலம் பாதித்த மகனே கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் வந்து கொலை செய்தார்களா? என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

சண்டையின்போது, ஆத்திரத்தில் அகிலனே தாயைக் கொலை செய்துவிட்டு ’ராம்’ படப்பாணியில் அருகிலேயே அமர்ந்திருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

THIRUNELVELI, PALAYANKOTTAI, MURDER, MOTHER, MENTALLY ILL SON