'புரட்டி எடுத்த வயிற்று வலி'...'ஸ்கேனை பார்த்து பயந்த பெண்'...மாஸ் காட்டிய 'சென்னை மருத்துவர்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளம்பெண்ணின் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகளை ஒரே அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
சென்னையைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். திடீரென வந்த இந்த வயிற்று வலி, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால் பயந்துபோன அந்த பெண் மருத்துவரை அணுகினார். அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்க்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இது அந்த பெண்ணை அதிர்ச்சியில் உறைய வைத்தது. காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 759 நீர்க்கட்டிகள் வயிற்றுக்குள் இருந்தன.
இதையடுத்து இந்த நீர்கட்டிகளை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் ஒரே அறுவை சிகிச்சையில், அனைத்து நீர்கட்டிகளையும் அகற்றி சாதனை படைத்தனர். இதனிடையே இந்த நீர் கட்டிகள் குறித்து பேசிய மருத்துவர்கள், ''வயிற்றில் நீர்க்கட்டிகள் வளரும் போது, எந்தவிதமான அறிகுறிகளும் நோயாளிகளுக்கு தெரியாது. நீர்க்கட்டிகள் வளர்ந்த பிறகு திடீரென கடுமையாக வயிற்று வலி ஏற்படும் அப்போது தான் ஏதோ பிரச்னை இருப்பதாக நோயாளிகள் உணர்வார்கள்.
நீர் கட்டிகளால் ஆபத்தும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வயிற்றுக்குள்ளேயே நீர்கட்டிகள் வெடித்து விட்டால் அது உயிரையே காவு வாங்கி விடும். நீர்க்கட்டிகள் வராமல் தடுக்க சுத்தமான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்த மருத்துவர், நாய், ஆடுகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், கைகளை நன்கு சுத்தம் செய்ய பின்னரே உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.