'நிலவிய குழப்பம்'...'யாருக்கெல்லாம் 7.5% உள் ஒதுக்கீடு'... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இந்த உள் ஒதுக்கீடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத்தொடர்ந்து உதகையில் செய்தியாளர்கள் முதல்வரிடம் விளக்கம் கேட்டிருந்தனர். அதற்கு முதல்வர் 7.5% உள் ஒதுக்கீடு என்பது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு உதவிபெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார்ப் பள்ளிகளே என உதகையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் உள் ஒதுக்கீட்டில் நிலவி வந்த குழப்பம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், “6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தலைமை ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தர வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களைக் கையெப்பம் பெற்றுவர அலைக்கழிக்கக்கூடாது. மாணவர்கள் நலன் கருதி கால தாமதமின்றி படிப்பு சான்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்