மாடு மிதிச்சி கால் 'ஊனமா' போச்சு... 70 கி.மீ தூரம், 8 மணி நேர சைக்கிள் பயணம்... '73 வயது' முதியவரின் நெகிழ்ச்சிக்கதை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்காக முதியவர் ஒருவர் 70 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாடு மிதிச்சி கால் 'ஊனமா' போச்சு... 70 கி.மீ தூரம், 8 மணி நேர சைக்கிள் பயணம்... '73 வயது' முதியவரின் நெகிழ்ச்சிக்கதை!

கொரோனா பலரின் வாழ்வையும் அடியோடு புரட்டிப்போட்டு விட்டது. நன்றாக வாழ்ந்தவர்கள் கூட அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்று தவிக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நிவாரணம் பெறுவதற்காக முதியவர் ஒருவர் 70 கி,மீ சைக்கிள் மிதித்து நெகிழ வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கும்பகோணம் அடுத்த நாச்சியார்புரம் வடக்குத்தெருவை சேர்ந்த நடேசன்(73) என்னும் முதியவர் நிவாரணம் வேண்டி அரசு அதிகாரிகளை அணுகி உள்ளார். அப்போது அவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கேட்டு உள்ளனர். இல்லை என்றதும் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லுமாறு தெரிவித்து இருக்கின்றனர்.

பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதால் என்ன செய்வது என யோசித்த நடேசன் சைக்கிளில் செல்வது என முடிவு செய்து, 70 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே பயணித்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்ய கலெக்டர் கோவிந்தராசுவிடம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர் கலெக்டரிடம் தனக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையான அட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதைக்கேட்ட கலெக்டர் உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியை அழைத்து நடேசனின் கோரிக்கை குறித்து தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள், அவருக்கு உரிய விண்ணப்பத்தை வழங்கி, அதில் கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரிடம் சான்றிதழ் வாங்கி வாருங்கள். அடையாள அட்டை தருகிறோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் கும்பகோணத்துக்கு மீண்டும் சைக்கிளிலேயே புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து நடேசன், '' சின்ன வயசுல மாடு மிதிச்சி கால் ஊனமா போச்சு. கோலமாவு வியாபாரம் சைக்கிள்ல போய் பண்ணுவேன். 2 வருஷத்துக்கு முன்னால மனைவி இறந்து போய்ட்டா. ஒரு மகன் இருக்கிறான். 2 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்தேன். ஆனால் கிடைக்கவில்லை. கொரோனா நிவாரணம் கேட்டபோது அடையாள அட்டை கேட்டனர். இதனால் அதிகாலை 3 மணிக்கு சைக்கிளில் இருந்து கிளம்பி காலை 11 மணிக்கு வந்தேன்,'' என்றார்.

கொரோனாவால் வேலையிழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த 73 வயது முதியவரின் விடாமுயற்சி நிச்சயம் உற்சாகமளிக்கும்!

மற்ற செய்திகள்