'என் மகளை அடிச்சே கொன்னுருக்காங்க...' 'அவளோட பின் தலையில...' 'இதெல்லாம் அவங்க போடுற நாடகம்...' அப்பா கண்ணீர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்மிடிப்பூண்டி பகுதியில், திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன தன் பெண்ணை மாப்பிளை வீட்டார் வரதட்சணை கேட்டு கொலை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார் பெண்ணின் அப்பா.

'என் மகளை அடிச்சே கொன்னுருக்காங்க...' 'அவளோட பின் தலையில...' 'இதெல்லாம் அவங்க போடுற நாடகம்...' அப்பா கண்ணீர்...!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் வசிக்கும் சேகரின் மகள் சுனிதா பி.எஸ்ஸி பட்டதாரி ஆவார். சுனிதாவும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் (34) காதலித்து வந்துள்ளனர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் 8.9.2019-ல் திருமணம் நடந்தது.

திருமணம் ஆகி ஓரிரு மாதங்களில் கார்த்திக் வீட்டார் வரதட்சணை கேட்டு சுனிதாவை கொடுமைப்படுத்தி பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். சுனிதாவின் தந்தை சேகர் மகளுக்கு சமாதானம் சொல்லி கணவர் வீட்டுக்கு அனுப்புவதும் நடைமுறையாக இருந்துள்ளது.

இதையடுத்து இன்று ஏப்ரல் 24  ஆம் தேதி சுனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சேகரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மகள் இறந்த செய்தி கேட்டு பதறியடித்து கொண்டு மருமகன் வீட்டிற்கு வந்துள்ளார் சேகர். அப்போது அவரின் பின்பக்க தலையில் காயமும் ரத்தக்கசிவும், கழுத்தில் தழும்பும் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த சுனிதாவின் அப்பா சேகர், பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் 'தான் மகள் சுனிதாவை மணமகன் வீட்டாருக்குத் தேவையான சீர்வரிசையைக் கொடுத்தோம். ஆனால், திருமணமான ஒரு மாதத்தில் வரதட்சணைக் கேட்டு சுனிதாவை அவரின் கணவர் குடும்பத்தினர் கொடுமைபடுத்தி வந்தனர். அடிக்கடி பணம் கேட்டு சுனிதாவை என்னுடைய வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இப்போது தீடீரென என் பொண்ணு இறந்துட்டா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் கூறினர்.

அங்கு சென்று பார்க்கும் போது சுனிதாவின் பின்தலையில் காயமும் ரத்தக் கசிவும், கழுத்தில் தழும்பும் இருந்தது. பணத்துக்காக என் மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு அவரின் கணவர் குடும்பத்தினர் தற்கொலை என நாடகமாடுகின்றனர்' என சேகர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தனது விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார் மேலும் திருமணமாகி 7 மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருவதாகவும் கூறினார்.

பிரேத பரிசோதனைக்காக சுனிதாவின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,  பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பிறகுதான் சுனிதாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.