மனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மன நோயாளி போல் பேசி வந்த சைக்கோ இளைஞர், 6 வயது சிறுவன் மற்றும் 60 வயது மூதாட்டி ஆகியோரை பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, வடக்கு முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஜெயசங்கர் (31). இவருடைய மனைவி ரேவதி (28). இவர்களுக்கு நகுலன் (6) என்ற மகன் இருந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் மதியம் நகுலன் தனது வீட்டின் அருகில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் சிறிது நேரத்தில் அவன் திடீரென்று மாயமானான்.

இதையடுத்து பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாயமான நகுலனை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவன் கிடைக்காததால் இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து மாயமான சிறுவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அதே ஊரைச்சேர்ந்த கூலி தொழிலாளியான அருள்ராஜ் (23) என்ற இளைஞர்,சிறுவனை அழைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பிறகு நடத்திய விசாரணையில், சிறுவன் தன்னை பின் தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் காலால் மிதித்ததாகவும், இதில் அவன் இறந்து விட்டதாகவும் அருள்ராஜ் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டாமல், அருள்ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுவனின் சடலம் கிடக்கும் இடத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு சென்று பார்த்த போது, சிறுவனின் கழுத்தில் கத்தியால் அறுத்த காயங்கள் இருந்ததால் சிறுவன் கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறி சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் மருத்துவர்கள் நடத்திய முதற் கட்ட பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மனநோயாளி போல் நடித்த அருள்ராஜை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அதில் சிறுவனை கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது சிறுவன் சத்தமிட்டதால் அவனை மிதித்து கொலை செய்ததாகவும், அவன் உயிர் பிழைத்து காட்டி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக கழுத்தை அறுத்ததாகவும் அருள்ராஜ் ஒப்புக் கொண்டதாக போலீசார் கூறினர்.

இதேப்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 60 வயது மூதாட்டி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த சம்பவத்தில் அருள்ராஜை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரிடம் சொன்னதையே திரும்பத் திரும்ப கூறி, தன்னை ஒரு மன நோயாளி போல காட்டிக் கொண்டு ஜாமீனில் எளிதாக அவர் வெளியே வந்துள்ளார். மன நோயாளி போல் அவரது நடவடிக்கை இருந்ததால், அவரை ஊரில் உள்ளோரும் சந்தேகப்படவில்லை. மேலும் அருள்ராஜ் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHILD, WOMAN, PSYCHO, YOUTH