'ஏசி ஓடிட்டு இருந்தது, அதுனால ஜன்னல் எல்லாம் பூட்டி இருந்துச்சு'... 'ஒரே நேரத்தில் 5 பேருக்கு நடந்த கொடூரம்'... சந்தேகத்தை கிளப்பியுள்ள உறவினர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சேலம் நகரமலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார். இதனால் மரத்தாலான அழகுப் பொருட்களைச் செய்வதில் ஆர்வம் கொண்ட அவர், பல அழகுப் பொருட்களைச் செய்து வீட்டில் வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு இரண்டு மணியளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. ஏற்கனவே வீடு முழுவதும் மரப் பொருட்கள் நிறைந்து இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனின் மனைவி புஷ்பா, சகோதரர் கார்த்திக், கார்திக்கின் மனைவி மகேஸ்வரி, கார்திக்கின் மகன்கள் 12 வயதான சர்வேஷ் 8 வயதான முகேஷ் ஆகிய 5 பேரும் மூச்சுத்திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு அறையில் படுத்திருந்த அன்பழகனும் அவரது பெற்றோரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஒரே நேரத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த அன்பழகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதார்கள். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏசி ஓடிக் கொண்டு இருந்துள்ளது. இதனால் காற்று வெளியே செல்லவோ, உள்ளே வரவோ முடியாத அளவுக்குக் கண்ணாடி ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீடு முழுவதும் புகை சூழ்ந்த நிலையில் உள்ளே இருப்பவர்களால் என்ன செய்வது தெரியாமலும், வெளியே செல்ல முடியாமலும் தவித்து உள்ளேயே சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களைக் கொண்டு அங்குக் கிடைத்த தடயங்களைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், ரே நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உறவினர்கள் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்