'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது'... 'அபராதம்' வீட்டுக்கே தேடி வரும்'... 'சென்னை போலீஸ்' அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாட்டிலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதியினை மீறும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஏராளமான விபத்துகளும் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்காக சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டால் சாலை விதிகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை படம் பிடிக்கும் அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக அண்ணா நகர் பகுதியில் திருமங்கலம், சாந்திகாலனி சந்திப்பு உள்ளிட்ட ஐந்து முக்கிய சந்திப்புகளில் இந்த அதிநவீன கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏஎன்பிஆர் என அழைக்கப்படும் இந்த நவீன கேமராகள், வாகனங்கள் கடந்து செல்லும் போதே விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை காட்டி கொடுக்கும், வாகன பதிவெண்ணுடன் தகவலை தெரிவிக்கும். இந்த தொழில்நுட்பம் தேசிய தகவல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், விதிகளை மீறுவோரின் வீட்டு முகவரிக்கு அபராத ரசீது அனுப்பி வைக்கப்படும்.
இதனிடையே இதுபோன்ற நவீன சிசிடிவிக்களை உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டதாகவும்,மாநகர் முழுவதும் இதுபோன்ற நவீன சிசிடிவிக்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இனி போக்குவரத்து காவலர் இல்லை என நினைத்து, விதிகளை மீறுவோருக்கு அபராதம் வீடு தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.