‘வீட்டு வாசலில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... '4 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே விவசாயத் தோட்டத்திலிருந்த பண்ணைக்குட்டையில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி, 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே, திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார் (27). இவரது மனைவி வினிதா (23). இவர்களுக்கு ஹர்சித் (4) என்ற மகனும், ஹர்சினி என்ற 8 மாத குழந்தையும் இருந்தது. வீட்டின் அருகே தோட்டமும் இருந்ததால், அதில் வாழை சாகுபடி செய்து வந்தனர். இதற்காக, வீட்டை ஒட்டி, 3 முதல் 4 அடியில் நீரை தேக்கிவைக்க பண்ணை குட்டை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மதியம், செல்வக்குமார் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்தார். வினிதா வீட்டுக்குள் வேலையாய் இருக்க, குழந்தை ஹர்ஷித் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து வினிதா வாசலில் வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அக்கம் பக்கம் சென்று பார்த்தபோது, குட்டை தண்ணீரில் ஹர்ஷித் மூழ்கியபடி இருந்தான்.
அதைக்கண்ட வினிதா அலறி அடித்துக்கொண்டு ஓடி, குட்டையில் இருந்து மகனை மீட்டு, சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு குழந்தையின் உடலை பார்த்து, பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கிய குட்டைகளில் மூழ்கி குழந்தைகள் உயிரிழந்து வருவது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.