‘திடீரென ஏற்பட்ட மின் தடை’... ‘இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தங்களுக்கு வரும் மின் இணைப்பை தாங்களே சரி செய்ய முயன்ற இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘திடீரென ஏற்பட்ட மின் தடை’... ‘இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்’!

கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், பழங்குடியின மக்கள் வசிக்கும் கோதையாறு, தச்சமலை, முடவன்பொற்றை, குற்றியார் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் குற்றியாரில் கடந்த புதன்கிழமை அன்று இரவு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சஜின் சலோ (22), சுபாஷ் (20), மன்மதன் (25) ஆகிய மூவரும் சேர்ந்து, அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பேச்சிபாறை ஜீரோபாயின்ட் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு இருந்த மின்மாற்றியில் காய்ந்த கம்பால் தட்டி, தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் கொண்டு வர முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில் 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவ்வழியே சென்ற கிராம மக்கள், இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்கள் மூவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், ‘மலைக் கிராமங்களில் மரக்கிளைகள் விழுவது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவது வழக்கமாகியுள்ளது. பின்னர் இதனை சரிசெய்ய நீண்ட நாள்கள் ஆவதால், அங்குள்ள இளைஞர்களே இதுபோன்று சரிசெய்து வந்துள்ளனர். தற்போதும் அதுபோல் முயற்சி செய்ததில், இளைஞர்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

KANYAKUMARI