‘கல்லூரி மாணவர்களை குறிவைத்து’... ‘இளைஞர்கள் செய்யும் அதிர்ச்சி காரியம்’... 'வலைவீசிய போலீஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை, கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கல்லூரி மாணவர்களை குறிவைத்து’... ‘இளைஞர்கள் செய்யும் அதிர்ச்சி காரியம்’... 'வலைவீசிய போலீஸ்'!

கோவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று அதிகாலை பேரூர் பச்சாபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியிலிருந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று நிற்பதை கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரில் இருந்த 3-பேரும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சொகுசு காரில் போதை மாத்திரைகளுடன் இருந்த சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்பர் சபரி, தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், செல்வபுரம் பகுதியை சேர்ந்த அனுப் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட 212 போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 3 பேரும் முத்துசாமி காலனியை சேர்ந்த சித்திக்(29) என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகள் அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு அளிக்க கூடியது. இதை சாப்பிட்டால் 24 மணி நேரத்திற்கு நினைவாற்றலை இழந்து மயக்கம் இருக்கும். கடந்த 3 மாதமாக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத்திரை ரூ.300-க்கு விற்பனை செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சித்திக்கை தேடி வருகிறோம்’ என்றார்.

DRUGS, COIMBATORE, COLLEGE, STUDENTS