‘ரேர் பீஸ் சார்!’.. ‘பூஜை பண்ணா பவர் ஏறிடும்!’.. கோவையை அதிரவைத்த ‘ரைஸ் புல்லிங் ராஜாக்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்டம் மூலனூரைச் சேர்ந்த சாமிநாதன் (50) என்கிற ஆடு வியாபாரியை ஆறுமுகம் (38), ராஜா (43) மற்றும் சோமனூரைச் சேர்ந்த தனபால் (33) ஆகிய 3 பேர் சேர்ந்து, கோயில் கலசத்தில் இரிடியம் இருப்பதாகவும் அதை வாங்கினால் நோய் நொடி நீங்கி, பணம் பெருகும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி 25 லட்சம் ரூபாய் அதற்கு ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
சாமிநாதனின் நண்பரான தனபால் மூலம் இந்த டீல் நடந்ததை அடுத்து, இதில் 5 லட்சம் ரூபாயை சாமிநாதனிடம் இருந்து இந்த 3 பேரும் பெற்றுக்கொண்டு, மீதிப்பணத்துடன் கோவை வந்து இரிடியத்தை பெற்றுக்கொள்ள சொல்லியுள்ளனர். ஆனால் நேரில் வந்த பின்பும் இரிடியத்தை தராமல் இரிடியத்துக்கு பவர் ஏற்ற சிறப்பு பூஜைகள் நடந்து வருவதாகவும் கூறி இரிடியத்தை காண்பித்துள்ளனர்.
ஆனால் சந்தேகித்த சாமிநாதன் தனது நண்பர்களுடன் விசாரித்தபோதுதான் இந்த கும்பல் கோவை மற்றும் கேரளாவில் இப்படி பேசி மோசடி செய்ததை அறிந்துகொண்டார். அதன் பின் கோவை பெரியநாயக்கன் பாளையம் போலீஸாரிடத்தில் அளித்த புகாரை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் வெள்ளிக் குடத்துக்கு முலாம் பூசி, இரிடியம் என்று ஏமாற்றிய இந்த 3 பேரிடமும் இருந்த கார், 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.