ஆமா இங்க இருந்த டவர் எங்க..? ஆபிசர் போல வந்தவர்களின் உலகமகா உருட்டை நம்பிய வீட்டுக்காரர்.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் ஆபிசர்கள் போல நடித்து செல்போன் டவரை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
டவர்
சமீப காலமாக தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி இருக்கும் செல்போன் டவர்களை சில கும்பல்கள் திருடிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், சேலத்தில் வினோதமான முறையில் ஒரு திருட்டை நடத்தியிருக்கிறது கும்பல் ஒன்று. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2001 ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்று டவரை அமைத்திருக்கிறது. இதை பாதுகாக்க அதே பகுதியை சேர்ந்தவரையும் அந்த நிறுவனம் பணியமர்த்தியிருக்கிறது.
இதனிடையே கடந்த ஜூலை மாத இறுதியில் 10 பேர்கொண்ட கும்பல் ஒன்று வந்திருக்கிறது. தங்களை அதிகாரிகள் போல காட்டிக்கொண்ட அவர்கள் பாதுகாவலரிடம் சில ஆவணங்களை காட்டி இந்த செல்போன் டவர் செயல்படாமல் உள்ளதாகவும் எனவே இதை கழற்றி வேறு இடத்தில் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அவரும் நம்பவே ராட்சத கிரேனின் உதவியுடன் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள டவரை இந்த கும்பல் திருடிச் சென்றிருக்கிறது. டவர் முழுவதையும் அங்கிருந்து கும்பல் திருடிச் செல்ல வெறும் கான்கிரீட் தளம் மட்டுமே அங்கே இருந்திருக்கிறது.
நிஜ அதிகாரிகள்
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த உண்மையான அதிகாரிகள் டவரை பார்வையிட வந்தபோது அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து பாதுகாவலரை அழைத்து இதுபற்றி கேட்க, அப்போதுதான் அவர்களுக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து வாழப்பாடி காவல்நிலையத்தில் அதிகாரிகள் இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிவந்த காவல்துறையினர், இறுதியில் இதில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து [ 35 ] வாழப்பாடி காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சர்மா [ 38 ] மற்றும் துாத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் [ 33 ] ஆகிய மூன்றுபேரிடமும் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட டவரின் பாகங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்