'முதுகுல சுளுக்கு புடிச்சு இருக்கு சார்'... 'எங்க பேண்டேஜை கொஞ்சம் கழற்றுங்க பாப்போம்'... அதிர்ந்து போன சென்னை விமான நிலைய அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடத்தல் பொருட்களை எடுத்து வருவதில் பலரும் புது வகையான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் கும்பல் ஒன்று மீண்டும் சிக்கியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்குத் துபாயிலிருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அனஸ் சென்னையைச் சேர்ந்த ஜும்மாகான் மற்றும் முகமது ரபி ஆகிய மூவரின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அப்போது அந்த 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது இரண்டு பேரின் முதுகு பகுதி சற்று வீங்கியிருந்தது. இது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த, முதுகு பகுதி ஏன் வீங்கியிருக்கிறது என அதிகாரிகள் கேட்டனர். அப்போது முதுகில் சுளுக்கு பிடித்து இருப்பதாகவும், அதற்காக பேண்டேஜ் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், பேண்டேஜை பிரித்துப் பார்த்தனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. மற்றொருவர் பேண்ட்டில் மறைத்துக் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரிடம் இருந்தும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்