22 வயதில் கொரோனாவுக்கு பலியான 'ஆம்புலன்ஸ்' ஊழியர்... கொரோனா 'கன்ஃபார்ம்' ஆனத கூட வீட்ல சொல்லாம இருந்துருக்காரு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் நேற்று கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பொதுவாக வயதானவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்று மூலம் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் பரவலாக இருந்த நிலையில் 22 வயது வாலிபரின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், கொரோனா பணி காரணமாக கடந்த 4 மாதங்கள் வீட்டிற்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் சென்று விட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. கொரோனா பரிசோதனை முடிவடைந்த நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து கோயம்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஒரு வாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து சக ஊழியர் கூறுகையில், 'காய்ச்சல் வந்ததும் அவர் உடைந்து போய் விட்டார். கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கோவை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது அவரை சந்தித்தோம். 'நல்லா இருக்கேன், சீக்கிரம் திரும்பி வந்துடுவேன்' என கூறினார். அதே போல, இரண்டு நாட்களுக்கு முன் வரை, நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். தனக்கு கொரோனா இருக்கும் தகவல் வீட்டுக்கு தெரிந்தால் பயந்து போய் விடுவார்கள் என எதையும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். திடீரென அவரின் உடல்நிலை மோசமாகி இப்படி ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது' என கலங்கிப் போனார்.
கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மட்டுமே பி.பி.ஐ கிட் உட்பட உபகரணங்கள் கொடுப்பதாகவும், சாதாரண 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு எவ்விதக் கொரோனா தடுப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் சில ஊழியர்கள் முன் வைக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கையில் கொரோனா பாதித்தவர் ஆம்புலன்சில் வந்தாலும் அது தெரிய எங்களுக்கு வாய்ப்பில்லை. அந்த அலட்சியத்தால் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பலியான முதல் ஆம்புலன்ஸ் ஊழியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்