'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டதால், சென்னை இளைஞர்கள் இருவர் செய்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்!

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சோழன் நகரைச் சேர்ந்தவர் கவுதம். இவர், போரூர் காரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய தொலைபேசி எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய இருவர், “கொரட்டூர் பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 20 பவுன் நகைகளை ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்துக்கு அடகு வைத்து உள்ளோம். அந்த நகைகளை மீட்டு, மீண்டும் மார்க்கெட் விலைக்கு அவற்றை விற்றுத்தரும்படி” கூறியுள்ளனர். அதன்பின்பு நகை அடகு வைத்த ரசீதையும் கவுதம் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர்.

அவற்றை சரிபார்த்த கவுதம் அதனை உண்மை என்ன நம்பி, ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்துடன் கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே சென்றுள்ளார். அங்கு கவுதமை சந்தித்த இரு இளைஞர்களும், அவர்கள் குறிப்பிட்ட அடகு கடைக்கு கூட்டி சென்றார்கள். ஆனால் அந்த அடகு கடை பூட்டி இருந்தது. உடனே அவர்கள், அடகுகடையின் பின்புறம்தான் கடைக்காரரின் வீடு உள்ளது. பணத்தை கொடுத்தால் நாங்கள் போய் நகையை திருப்பி வருகிறோம் என கூறி பணத்தை பெற்று கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் இருவரும் திரும்பி வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டது குறித்து கவுதம் அதிர்ந்து போனார். இதையடுத்து கொரட்டூர் காவல்நிலையத்தில் கவுதம் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள். மேலும் மர்மநபர்களின் செல்போன் அழைப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து சம்பவம் தொடர்பாக அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார், மற்றும் அமைந்தகரையை சேர்ந்த ஜெகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். 

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், '' இருவரும் வெளிநாட்டிற்கு செல்ல முயன்றபோது, பணத்திற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது என்ன செய்யலாம் என யோசித்தபோது, “அடகு வைத்த நகைகளை மீட்டு அதனை மீண்டும் மார்க்கெட் விலைக்கே விற்று தருவதாக” கவுதம் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்துள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து இருவரும் நகையை அடகு வைத்ததுபோல் போலியான ரசீதை தயார் செய்து, அதை நிதி நிறுவன ஊழியர் கவுதமுக்கு அனுப்பினர். அதை நம்பி பணத்துடன் வந்த அவரை ஏமாற்றி பணத்தை பறித்துச்சென்றது தெரிந்தது. கைதான 2 பேரிடம் இருந்தும் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடு செல்வதற்காக இளைஞர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POLICE, ROBBERY, CHENNAI CITY POLICE, CHIT FUND, EMPLOYEE, CHEATING