“வரவேற்பு நிகழ்ச்சியில் வந்த வேற லெவல் சோதனை!”.. “போர்க்களமான திருமண மண்டபம்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாம்பரம் நகராட்சியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில், நிகழ்ச்சி நடத்திக்கொள்ள இருதரப்பினரிடம் நகராட்சி ஊழியர்கள் பணம் பெற்ற சம்பவத்தால் இரு தரப்பினரும் ஒரே நாளில் சீர் வரிசையுடன் மண்டபத்துக்குள் நுழையும்போது முட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் இவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் மண்டபத்தில் ஜூலை மாதம் பதிவு செய்ய வந்திருந்தார். அன்றைய தேதியில் மண்டபம் காலியாக இருந்ததால் நகராட்சி ஊழியர்கள் பணத்தை கட்டச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு ரசீது பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால் பணம் செலுத்திய ரசீதை மேல்தளத்தில் உள்ள அலுவலரிடம் கொடுக்க வேண்டும், ரசீதுடன் திருமண அழைப்பிதழ், மணமக்களின் புகைப்படங்கள், அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவண விபரங்களையும் நகராட்சி ஊழியர்களிடம் கொடுத்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகே, அவர்கள் கேட்ட அந்தத் தேதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு பதிவேட்டில் அந்த தேதி குறிப்பிடப்படும். ஆனால் ஜெயபிரகாஷ், தான் பணம் செலுத்திய ரசீதை நகராட்சியில் கொடுத்து பதிவு செய்யாமல் எடுத்துக்கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த தேதி நகராட்சி பதிவேட்டில் காலியாகவே இருந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் திருவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் என இரண்டு நாட்களுக்கு பதிவு செய்ய வந்துள்ளார். ஏற்கனவே ஜெயப்பிரகாஷ் பதிவு செய்த தேதியில் பதிவேட்டில் குறிப்பிடப்படாததால், காலியாக இருந்த அந்த தேதியை ராமச்சந்திரனுக்கு நகராட்சி ஊழியர்கள் கொடுத்துள்ளனர். ராமச்சந்திரனும் முறையான ஆவணங்களை நகராட்சி ஊழியர்களிடம் கொடுத்து பதிவேட்டில் பதிவு செய்து சென்று விட்டார்.
இந்நிலையில்தான் நேற்று காலை 10 மணி அளவில் ராமச்சந்திரனின் உறவினர்கள் சமையல் பொருட்கள், சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து இறங்கினார்கள். அதே நேரத்தில் ஜெயப்பிரகாஷ் தரப்பினரும் சமையல் பொருட்களையும் சீர் வரிசையுடன் நகராட்சி திருமண மண்டபத்தின் முன் வந்து நின்றார்கள். முதலில் இரு தரப்பினரும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டுள்ளனர் . இரு தரப்பினரும் ‘நாங்கள்தான் மண்டபத்தை புக் செய்து இருக்கிறோம்’ என்று தத்தம் ரசீதுகளை காட்டி பல மணி நேரம் வாக்குவாதம் செய்தனர். இதனால் நகராட்சி அலுவலகமே போர்க்களம் போல் ஆனது. அதன் பிறகு இருவருக்கும் ஒரே தேதியை கொடுத்த நகராட்சி ஊழியர்களிடம் கடுமையான தகராறு செய்ய தொடங்கினர்
இதில் ஜெயப்பிரகாஷ் தரப்பில் இருந்த தவறு என்ன என்பதை நகராட்சி ஊழியர்கள் ஜெயப்பிரகாஷிடம் தெரிவித்தனர். ஆனாலும் ஜெயப்பிரகாஷ் அதை ஏற்கவில்லை என தெரிகிறது. இது குறித்து அறிந்த தாம்பரம் காவல் ஆய்வாளர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் முறையாக பதிவு செய்த ராமச்சந்திரனின் குடும்பத்தினர் வரவேற்பு நிகழ்ச்சியை மண்டபத்தின் உள்ளே நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பணத்தை கட்டியும் ஜெயப்பிரகாஷ் முறையாக பதிவு செய்யாததால் அவரது குடும்பத்தினருக்கான வரவேற்பு நிகழ்ச்சி, மண்டபத்துக்கு வெளியில் இருந்த காலி மைதானத்தில் அரங்கு அமைக்கப்பட்டு நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் நகராட்சி நிர்வாகம் முன்வந்தது.