‘இடுப்பை சுற்றி 1.8 கிலோ தங்கம்’.. ‘பையில் ஈரான் குங்குமப்பூ’.. சென்னை விமானநிலையத்தில் சிக்கிய நபர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமானநிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஈரான் நாட்டு குங்குமப்பூ கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமானநிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இன்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த ஏகாருல் பகுதியை சேர்ந்த அமீர் தெக்குள்ளா கண்டி (41) மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆரூண் நாஹர் மொயாத் (29) ஆகிய இருவரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது இருவரின் இடுப்பிலும் ரப்பரால் சுற்றப்பட்டு தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களிடமிருந்த சுமார் 71.5 லட்சம் மதிப்புள்ள 1.82 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரையும் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை துபாயில் இருந்து ஓமன் ஏர் விமானத்தில் வந்த நாகப்பட்டிணத்தை சேர்ந்த முகமது ஜாவித் முஷார் (22) என்ற இளைஞரை விமான வருகைப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் சுமார் 63.60 லட்சம் மதிப்புள்ள 26.5 கிலோ எடையுள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.