'அடுத்தடுத்து இறந்த குரங்குகள்...' இறந்த 14 குரங்குகளுக்கும் 'ஒரு' ஒற்றுமை இருக்கு...! அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பரங்குன்றம் பகுதியில் 14 குரங்குகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து 14 குரங்குகள் இறந்துள்ளன, இறந்த குரங்குகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலேயே காணப்படுகின்றன. இந்த ஒற்றுமை அனைவரையும் குழப்பமடைய செய்துள்ளது.
மேலும் ஊரடங்கிற்கு முன்பு மலை ஏறும் பக்தர்கள் வழங்கும் வாழைப்பழம், தேங்காய், புளியோதரை, பொங்கல் போன்றவற்றை சாப்பிட்டு தனது பசியை போக்கிக்கொள்ளும். ஆனால் தற்போது ஆலயங்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை இன்றி உணவு இல்லாமல் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைகின்றனர்.
அதுமட்டு இல்லாமல் தற்போது கொரோனா தொற்று பரவுவதால், இந்த குரங்குகளின் இறப்பிற்கு வைரஸாக இருக்குமோ எனவும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குரங்குகளின் இறப்பு குறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மதனகலா வனத்துறைக்கு தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த குரங்குகளை பிரேத பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்து சென்றுள்ளனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து குரங்குகளின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து கூறவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குரங்குகளின் பசியை போக்க திருப்பரங்குன்றம் போலீசார், பல்வேறு இடங்களில் செயல்படும் தன்னார்வலர்கள் மூலம் வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், சப்போட்டா, பேரிட்சை போன்ற பழங்களையும், டிரம்களில் தண்ணீரையும் வைத்து இப்பகுதியில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர்.