ஏற்கனவே ஒரு 'புள்ள'ய இழந்துட்டோம்... இந்த பாழா போன 'கொரோனா'வால... இருந்த ஒரு தங்கத்தையும் இழந்துட்டு நிக்குறோம்... மனதை நொறுங்க வைக்கும் துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு மகன் இறந்து விட்டார்.
இந்நிலையில், மற்றொரு மகனான 13 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக, ஸ்ரீனிவாசனின் மகனுக்கு தசை மற்றும் இணைப்புத்திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 24 ஆம் தேதியன்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக சிறுவன் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானதும், சிறுவனை உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தார். இதனால், மருத்துவமனை வளாகத்திலேயே பெற்றோர்கள் கதறித் துடித்தனர்.
'ஏற்கனவே ஒரு மகன் இறந்துவிட்டதால் ஒரு மகனை மட்டும் மிகவும் ஆசையுடன் செல்லமாக வளர்த்தோம். ஆனால் அவனையும் இன்று இழந்து விட்டு நிற்கிறோம். இதுபோன்ற நிலை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது' என சிறுவனின் தந்தை ஸ்ரீனிவாசன் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதய இயங்குவிசை 70 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், சிறுவனுக்கு 27 சதவீதம் மட்டுமே இருந்தது. இருந்தபோதும் தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். சிறுவன் மரணத்திற்கு தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோய் தான் காரணம் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்