Breaking: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைப்பு.. தமிழகத்தில் முதன்முறையாக செய்யப்பட்ட புது மாற்றம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கபப்டாத நிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு கணிசமான அளவில் குறைந்த நிலையில் கட்டாயம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் 83 மையங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம்
முன்னதாக அரசு தேர்வுகள் இயக்ககம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஒன்றாக வெளிவர இருக்கின்றன. தமிழகத்தில் இவ்வாறு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும். ஜூன் 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும். பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in மற்றும் www.deg.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
மற்ற செய்திகள்