'கோவிலில் கல்யாணம் பண்ண பிளான் இருக்கா'?... 'திருமணத்திற்கு எத்தனை பேர் வரலாம்'?... இந்து சமய அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு எத்தனை பேர் கலந்து கொள்ளாமல் என்பது குறித்த அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனாலும் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அரசு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனக் கோயில் நிர்வாகத்தினருக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்து சமய அறநிலையத்துறை. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி கோயிலுக்குள் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்கு பத்து பேரும், கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. திருமண நிகழ்வுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் அறநிலையத்துறை இந்த புதிய கட்டுப்பாட்டை அமல் படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்