‘வீட்டுக்கு வரமாட்டியா?’... ‘அப்போ என்ன பண்றேனு பாரு’... '10 மாத பிஞ்சு மகளுக்கு’... 'தந்தையால் நடந்த விபரீதம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனியில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்த தகராறில், 10 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி ஜமீன் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (27). இவரும் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த அழகுமணி (25) என்பவரும் காதலித்து கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, கபிலன் (4) என்ற மகனும், காவ்யா என்ற 10 மாத பெண் குழந்தையும் இருந்தனர். பன்னீர்செல்வம் மது குடித்ததோடு மனைவியை சந்தேகப்பட்டு தகராறு செய்து தாக்கியுள்ளார். மேலும் வேலைக்குச் செல்லாமல் மனைவியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அழகுமணி கோபித்துக் கொண்டு, இரண்டு நாள்களுக்கு முன்னர், கோடாங்கிபட்டியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று பன்னீர்செல்வம் கோடாங்கிபட்டிக்குச் சென்று அழகுமணியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அழகுமணி மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், தகாத வார்த்தைகளால் அழகுமணியை திட்டியவர், குழந்தைகளை `கொலை செய்துவிடுவேன்’ எனக் கூறி, பெண் குழந்தை காவ்யாவை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த அழகுமணி, உடனடியாக பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றார். அதற்குள், பகல் 2:15 மணிக்கு குழந்தை பறித்து சென்ற பன்னீர்செல்வம், கோடாங்கிபட்டியில் தாமோதரன் என்பவர் தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குழந்தையை போகும் வழியில் வீசியுள்ளார். அழகுமணியிடம் போலீசார் புகார் பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், கிணற்றில் குழந்தை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் மீட்டனர். அப்போது அது அழகுமணியின் குழந்தை காவ்யா எனத் தெரியவந்தது. இதையடுத்து, பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்த பி.சி.பட்டி காவல்துறையினர், அவரை கைதுசெய்தனர். குழந்தையின் தாயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன் - மனைவி இடையேயான சண்டையில், பெற்ற மகளைத் தந்தையே கிணற்றில் வீசிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.