VIDEO: ‘அவருக்கு அடிக்கவே தெரியல’!.. நியூஸிலாந்து பேட்ஸ்மேனை ‘கிண்டல்’ செய்த கோலி.. காட்டிக்கொடுத்த ஸ்டம்ப் மைக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து பேட்ஸ்மேனை கிண்டல் செய்த விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டெவன் கான்வே களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதனால் இந்த கூட்டணியை பிரிக்க இந்திய அணி பல முயற்சிகளை மேற்கொண்டது.
அப்போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய 35-வது ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டாம் லாதம் (30 ரன்கள்) அவுட்டானார். இதனை அடுத்து 54 ரன்களை கடந்திருந்த டெவன் கான்வே வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகே முடிக்கப்பட்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்திருந்தது.
இந்த நிலையில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதமை நேற்றைய போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்தார். அதில், போட்டியின் 4-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட டாம் லாதம், அடித்து ஆட முடியாமல் சற்று தடுமாறினார்.
— pant shirt fc (@pant_fc) June 20, 2021
அப்போது அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் விதமாக, ‘அவருக்கு விளையாடவே தெரியவில்லை. நீ வீசும் பந்தை எப்படி பேட்டில் பட வைப்பது என்று கூட அவருக்கு தெரியாது’ என விராட் கோலி கூறினார். இது அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்