‘விளையாட்டு காட்டும் வெதர்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சிக்கல்.. சவுத்தாம்ப்டன் நிலவரம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற சவுத்தாம்ப்டனில் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (18.06.2021) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள சவுத்தாம்ப்டனில் மழை பெய்து வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமாகியுள்ளது. இன்னும் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த இங்கிலாந்து வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர், ‘இன்று மேகமூட்டமான நாளாக இருக்கும். அதிகாலை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சவுத்தாம்ப்டனில் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பகுதிகளில் நாள் முழுவதும் கூட மழை பெய்யக்கூடும். ஆனாலும் வானிலை மாற்றத்தின் தன்மை காரணமாக மழைபெய்யும் இடங்களை துல்லியமாக கணிப்பது சிரமம்’ என அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் நிலவரப்படி, சவுத்தாம்ப்டனில் இன்று காலை 10 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 2 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 5 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டி ஆரம்பிக்கும் முதல் நாளே மழையால் தடைபட வாய்ப்பு உள்ளதா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொடர் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டால், இரண்டு அணிகளும் சாம்பியன் என அறிவிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்