'இத ஏத்துக்க முடியல!.. ஐசிசி செய்வது நியாயமா'?.. தோல்விக்கு பிறகு கேப்டன் கோலி சொன்ன வார்த்தைகள்!.. மாற்றம் நிகழுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், ஐசிசி மீது விராட் கோலி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

'இத ஏத்துக்க முடியல!.. ஐசிசி செய்வது நியாயமா'?.. தோல்விக்கு பிறகு கேப்டன் கோலி சொன்ன வார்த்தைகள்!.. மாற்றம் நிகழுமா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதல் சாம்பியன் கோப்பையை வென்ற அணியாக நியூசிலாந்துக்கு பெருமை சேர்ந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டையும் பிரபலபடுத்த வேண்டும் என்ற நோக்கில், அதற்கென சாம்பியன்ஷிப் தொடர் ஒன்றை உருவாக்கியது ஐசிசி அமைப்பு.

கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை தட்டிச் சென்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்த இந்திய அணி, நியூசிலாந்தை 249 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 139 என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள விராட் கோலி, "உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை ஒரே ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது ஒரு டெஸ்ட் தொடர் என்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டிருக்க வேண்டும். எந்த அணியால் தொடக்கத்தில் இருந்து மற்ற அணியை வீழ்த்த முடிகிறதோ அல்லது எந்த அணியால் மீண்டு எழுந்து வர முடிகிறதோ, அதுதான் வெற்றியாளரை தீர்மானிக்கும். வெறும் 2 நாட்களில் அழுத்தம் நிறைந்த போட்டியில் வெற்றி பெற்று காட்டுவதல்ல. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. 

மேலும், நடந்துமுடிந்த இந்த போட்டியை பார்த்தாலே நான் கூறுவது புரியும். ஏன் கூடுதலாக 2 போட்டிகளில் விளையாடுவதற்கு என்ன? இன்னும் 2 போட்டிகளில் விளையாடி அதில் இருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளரை நிர்ணயிப்பதில் என்ன பிரச்னை? வரலாற்றில் இத்தனை வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே 3 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடர்கள் தான் நினைவுக்கு வரும். அதுதான் என்றென்றும் நிலைத்து இருக்கும். இந்த ஒரே ஒரு போட்டி அல்ல. 

நாங்கள் இந்த போட்டியில் தோல்வியடைந்து விட்டோம் என்பதற்காக இதனை நான் கூறவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்திற்காக இதனை கூறுகிறேன். இதுபோன்ற தொடர்கள் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற வேண்டும். அப்போதுதான் சிறப்பாக இருக்கும். அதில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், நிறைய திறமைகள் வெளிப்படும், நீண்ட நாட்கள் நினைவுகளாக இருக்கும்" எனக்கூறியுள்ளார்.

கோலி கூறிய கருத்துகளை ஏற்கனவே ரவிசாஸ்திரி, யுவ்ராஜ் சிங் உள்ளிட்டோர் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஐசிசி முடிவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

மற்ற செய்திகள்