இந்த மேட்டர் அவருக்கு தெரியுமா? தெரியாதா?.. கொஞ்சம் பார்த்து விளையாடுங்க!.. இந்திய அணியின் எதிர்காலம் பும்ரா வசம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி பவுலர் பும்ராவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே(துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், இந்திய வேகப்பந்துவீச்சு கூட்டணியை பும்ரா தலைமையேற்று நடத்தவிருக்கிறார். உலகின் டாப் பவுலர்களில் ஒருவரான பும்ராவுக்கு இது நிச்சயம் சவாலான களமாக இருக்கப் போகிறது. ஏனெனில், இது சாதாரண டெஸ்ட் தொடர் மட்டுமல்ல, முதன் முறையாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி. கிட்டத்தட்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இணையானது.
முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா போன்றோர் கிரிக்கெட்டில் பும்ராவுக்கே சீனியர்ஸ் என்றாலும் செயல்திறன் அடிப்படையில் இன்று பும்ரா தான் டாப். எனவே, சந்தேகத்துக்கு இடமின்றி, ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணியை வழிநடத்தப் போவது அவர் தான். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2- 0 என்று வாஷ் அவுட் ஆனது. அதில், பும்ரா 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தான் இந்தியா இரண்டு போட்டியிலும் தோற்றது. ஆனால், இப்போது இந்தியா வசமிருக்கும் ஒரே ஆறுதல், போட்டி நியூசிலாந்தில் நடக்கவில்லை என்பதுதான்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரிஸ் பவுலிங் வியூகம் வெற்றி பெற்றதைப்போல், இப்போது மீண்டும் சவுத்தாம்ப்டனில் பும்ரா வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டும். தனக்கு மட்டுமின்றி, மற்ற பவுலர்களின் திறமையையும் அவர் வெளிக்கொண்டு வர வேண்டும்.
இதற்கிடையே, பந்துவீசுவதற்கு துணைபுரியும் விதமாக, இந்திய பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட வேண்டும். இப்படி பும்ரா முன் ஏகப்பட்ட சவால் காத்திருக்கிறது.
மேலும், கடந்த டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, பும்ரா பிரிஸ்பேன் டெஸ்ட்டில் விளையாடவில்லை. அந்த காயம் குணமான பிறகே, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட்டில் கலந்து கொண்டார்.
அப்போது கூட, இவ்வளவு சீக்கிரம் பும்ரா அணியில் இணைந்து விளையாடி இருக்கக் கூடாது, இன்னமும் ஓய்வு தேவை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர். அதன்பிறகு ஐபிஎல் என்று அவர் சகஜமாகிவிட்டாலும், மீண்டும் பும்ரா காயத்தில் சிக்கிவிடக் கூடாது. ஏனெனில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அனைத்துக்கும் லீடிங் பும்ரா தான். எனவே, பும்ராவை மையப்படுத்தியே இந்திய அணியின் பவுலிங் இருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
மற்ற செய்திகள்