'அதே 4 பேர்... அதே முக்கிய மேட்ச்'!.. 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்... மீண்டும் எப்படி?.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் 'கப்'-ஐ 'எந்த' கூட்டணி அடிக்கும்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 13 ஆண்டுகளுக்கு பின் 4 வீரர்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூன் 18ம் தேதி நியூசிலாந்து உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுகிறது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும், இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இதில், வரலாற்றில் முதன் முதலாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடுவதால், கிட்டத்தட்ட ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி அளவுக்கு ரசிகர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, வீரர்களே இதனை அப்படித்தான் உணர்கின்றனர். எனினும், இப்போட்டியில் இந்திய அணிக்கு சிக்கல்கள் அதிகமாக உள்ளன.
அதாவது, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதில் இருந்து இந்திய வீரர்கள் அனைவரும் முழு ஓய்வில் இருந்து வருகின்றனர். இப்போதும் போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் நகரில் குவாரண்டைனில் உள்ளனர். அவ்வப்போது வீரர்கள் பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும், ஒரு குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தனித்தனியாகவே செல்கின்றனர். பயிற்சிப் போட்டிகளும் இல்லை. இத்தனை சவால்கள் இருப்பதால், இறுதிப் போட்டிக்கு நேரடியாக வந்து களமிறங்குவதே இந்திய அணிக்கான பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்தியாவிடம் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இல்லை. ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடற்தகுதி பெறாததால், அவர் இங்கிலாந்து தொடரில் இடம் பெறவில்லை. பாண்டியாவுக்கு மாற்றாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் வேகப்பந்து வீச்சாளர் என்றாலும், ஐபிஎல் போட்டிகளில் தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், பாண்டியா அளவுக்கு அவரால் ஆற்றலை வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான்.
இதற்கிடையே, வரலாற்றில் முன்னதாக நடந்த சில சம்பவங்கள் தற்போது வைரல் ஆகிவருகின்றன. அதாவது, விராட் கோலி தலைமையிலான இந்திய Under 19 அணி, 2008ல் உலகக் கோப்பையை வென்றது. அதில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டியில், இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அதாவது, 13 வருடத்திற்கு முன்பு உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடிய விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் மீண்டும் எதிர் எதிர் அணிகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.
மேலும், 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் அரை இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின என்பது மற்றுமொரு ஸ்வாரஸ்ய தகவல்.
மற்ற செய்திகள்