"பிசிசிஐ கேட்டாலும் சொல்ல மாட்டேன்.." வாயடைக்க வைத்த சஹா.. "அப்படி என்ன தான்பா பிரச்சனை?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
இதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 18 வீரர்கள் இடம்பிடித்த டெஸ்ட் அணியில், சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இடம்பெறவில்லை.
அதே போல, இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் விரித்திமான் சஹாவின் பெயரும் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு அடுத்ததாக பேக்கப் கீப்பராக சஹா இருப்பார். ஆனால், இந்த முறை சஹா இல்லாமல், பரத் என்ற இளம் வீரர் பெயர் இடம்பெற்றுள்ளது.
விரக்தியில் சஹா
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்த சஹா, சோகத்துடன் சில கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு, தன்னுடைய டெஸ்ட் இன்னிங்ஸிற்காக பிசிசிஐ தலைவர் கங்குலி தன்னை பாராட்டியதாகவும், இந்திய அணியில் தனக்கு தொடர்ந்து இடம் கிடைக்கும் என தனக்கு உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மௌனம் கலைத்த டிராவிட்
அதே போல, இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட், தன்னை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியதாகவும் சஹா குறிப்பிட்டிருந்தார். இதற்கு டிராவிட் தன்னுடைய விளக்கத்தையும் அளித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, தன்னை பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டியதாக, ட்விட்டரில் சஹா ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பகிர, கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த சம்பவம், மிகப் பெரிய அளவில் சர்ச்சை ஆனது.
மிரட்டிய பத்திரிகையாளர்
ரவி சாஸ்திரி, ஹர்பஜன் சிங், சேவாக் உள்ளிட்ட பலர், சஹாவுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். அதே போல, சஹாவை மிரட்டிய நபர் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, பிசிசிஐ தரப்பில் இது பற்றி விசாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. பத்திரிகையாளரின் பெயர் என்ன என்பது பற்றி, ட்விட்டர் பதிவில் சஹா குறிப்பிடவில்லை. அவர் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் சஹாவிடம் சிலர் அறிவுறுத்தியிருந்தனர்.
தெரிவிக்க மாட்டேன்
இந்நிலையில், இது பற்றி சஹா தற்போது மனம் திறந்துள்ளார். 'பிசிசிஐ தரப்பில் என்னை யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை. இனி அவர்கள் தொடர்பு கொண்டு, அந்த பத்திரிகையாளர் யார் என என்னிடம் கேட்டால், நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். ஒருவரின் வேலையை கெடுப்பது என் நோக்கம் கிடையாது.
வீரர்களுக்கு மரியாதை இல்லை
அதனால் தான், அவரின் பெயரைக் கூட நான் ட்வீட்டில் குறிப்பிடவில்லை. ஊடக துறையில் இருக்கும் சிலர், கிரிக்கெட் வீரர்களை மரியாதை இன்றி நடத்துகின்றனர் என்பதை வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்பது தான், எனது பதிவுடைய நோக்கம். இனி இது போன்று எந்த வீரர்களுக்கும் நடக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இப்படி ஒரு செயல் தவறானது என்பதை அனைவரும் அறிய வேண்டும்' என சஹா தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
அந்த பத்திரிகையாளரின் பெயரை வெளியிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளரின் பெயரை தெரிவிக்க மாட்டேன் என சஹாவே தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வருமா அல்லது, தொடர்ந்து பலரும் கேள்விகளை எழுப்பி, பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்