‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி..’ உணவு இடைவேளைக்கு முன்பே முடிந்த ஆட்டம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாட்டிங்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இந்த அணியின் பந்துவீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 30 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்சமாக பகார் ஜமான், அசாம் தலா 22 ரன்கள் எடுத்தனர். 21.4 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். மே.இ.தீவுகள் அணியில் தாமஸ் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஸஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
106 ரன்கள் என்ற இலக்குடன் மே.இ.தீவுகள் அணியிலிருந்து கிறிஸ் கெயில், ஹோப் முதலில் களமிறங்கினர். ஹோப் 11 ரன்களிலும், பிராவோ ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கெயில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 34 பந்தில் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த நிகோலஸ் பூரானும் அதிரடியாக ஆடினார்.
மே.இ.தீவுகள் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் 3 மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தமாக மூன்றறை மணி நேரம் நடைபெற்ற ஆட்டம் 35 ஓவர்களே நீடித்தது.