"'கேப்டன்' பதவியும் போயிடுச்சு.. 'டீம்'லயும் வாய்ப்பு குடுக்கல.. அடுத்து என்ன தான் பண்ண போறீங்க??.." 'வார்னர்' இடம் குறித்து 'வில்லியம்சன்' சொன்ன 'பதில்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த வார்னரை, ஐபிஎல் சீசனின் பாதியில் நீக்கிய அணி நிர்வாகம், அவருக்கு பதிலாக வில்லியம்சனை கேப்டனாக நியமித்திருந்தது.

"'கேப்டன்' பதவியும் போயிடுச்சு.. 'டீம்'லயும் வாய்ப்பு குடுக்கல.. அடுத்து என்ன தான் பண்ண போறீங்க??.." 'வார்னர்' இடம் குறித்து 'வில்லியம்சன்' சொன்ன 'பதில்'!!

வார்னர் தலைமையில், பலமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஹைதராபாத் அணி, ஒரு முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத் அணி, தாங்கள் ஆடிய முதல் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இதன் காரணமாக, ஒரே ஒரு சீசனின் ஆட்டத்தை வைத்து, வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது, கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அது மட்டுமில்லாமல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், வில்லியம்சன்  கேப்டனாக களம் கண்ட நிலையில், ஆடும் லெவனில் கூட வார்னர் தேர்வாகவில்லை. கேப்டன் பதவியும் பறிபோய், அணியிலும் இடமில்லாமல் போனதால், வார்னரின் ரசிகர்கள் அதிகம் வேதனையடைந்தனர். மேலும், இந்த போட்டியிலும், ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியிருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், 'இந்த நாள் மிகவும் கடினமாக அமைந்து விட்டது. ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர், சிறப்பாக ஆடியிருந்தார். கடந்த சில வாரங்களாக, எங்களது அணி நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. எங்களது அணியைப் பொறுத்தவரையில், இன்னும் சில விஷயங்களை சரியாக கட்டமைக்க வேண்டியுள்ளது' என கூறினார்.

தொடர்ந்து, வார்னர் மீண்டும் அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய வில்லியம்சன், 'வார்னர் உலக தரம் வாய்ந்த வீரர். அவர் மீண்டும் அணியில் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதனைப் பற்றி எதுவும் என்னால் உறுதியாக கூற முடியாது. அவரை மீண்டும் இறக்குவது பற்றி, பயிற்சியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது' என அவர் தெரிவித்தார்.

இனிமேல், வார்னர் களமிறங்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், வில்லியம்சனின் இந்த பதில், நிச்சயம் வார்னர் திரும்பி வந்து அசத்துவார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்